எம்மைப் பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம் : கஜேந்திரகுமார் தெரிவிப்பு
ஆசனம், பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கையில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய எம்மைப் பலப்படுத்துவதுதான் காலத்தின் கட்டாயம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை யாழ்ப்பாணத்தில் நேற்று (19) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எந்தவிதமான நியாயமும் இல்லாமல்..
மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுகளை ஆரம்பித்திருந்தது.
ஆனால், துரதிஷ்டவசமாக அந்தப் பேச்சுகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருதலைப்பட்சமாக எந்தவிதமான நியாயமும் இல்லாமல் முறித்தது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினுடைய தலைவரோடு நாங்கள் பேச்சுகளை நடத்திக்கொண்டிருந்தாலும் கூட அவருடைய அந்தக் கூட்டணி எங்களைத் தவிர்த்து தமிழ்த் தேசியத்துக்கு மாறாகச் செயற்பட்ட ஒரு சில தரப்புகளையும் சேர்த்து கூட்டணி முயற்சியொன்றை எடுக்க ஆரம்பித்தார்கள்.
அந்தப் பின்னணியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வரவு - செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்புக்கு ஆதரவு வழங்கியது உள்ளிட்ட சில குறிப்பிட்ட காரணங்களால் தமிழ்த் தேசியக் கட்சி அதிருப்தி அடைந்து கொள்கை வழியிலேயே எங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்பினார்கள். நாங்களும் அதனை விரும்பினோம்.
ஜனநாயகத் தமிழரசுக் கட்சியினுடைய உறுப்பினர்களும் எங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்குப் பேச்சில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களும் தற்போது ஒன்றாகப் பயணிக்க முடிவெடுத்திருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |