திருகோணமலை நகர் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் அச்சுறுத்தல்:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
திருகோணமலை நகரின் பிரதான வீதிகளில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளினால் பொதுமக்கள் பாதுகாப்பற்ற பயணச் சூழலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதான வீதி, கடல்முக வீதி, திருஞானசம்பந்தர் வீதி உள்ளிட்ட நகரின் பல முக்கிய வீதிகளில் இன்று (06) காலை பெருமளவான கட்டாக்காலி மாடுகள் திரிவதைக் காண முடிந்தது.
மாடுகளின் அச்சுறுத்தல்
தினமும் காலை நேரங்களில் வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அவசர அவசரமாகப் பயணிக்கும்போது, வீதிகளில் திரியும் இந்த மாடுகளாலும், அவை இடும் சாணத்தினாலும் விபத்துகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வீதிகளின் குறுக்கே திடீரென மாடுகள் வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.
குறித்த கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில், கட்டாக்காலி மாடுகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கை குறித்து, புதன்கிழமை (05) மாநகர சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக முதல்வர் அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநகர சபை உடனடியாகக் களமிறங்கி, இந்த மாடுகளை அப்புறப்படுத்தி, அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதே திருகோணமலை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


