ஜனாதிபதி மாளிகையில் திருடிய பொருட்களை விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது
ஜனாதிபதி மாளிகையின் யன்னல்களில் திரைகளை தொங்கவிடும் மற்றும் சுவரில் பொருத்தப்பட்டிருந்த தங்க நிறத்திலான 40 பித்தாளை உருளைகளை கொள்ளையிட்டு, அவற்றை புராதன பொருட்களாக விற்பனை செய்ய முயற்சித்த மூன்று பேரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிகடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 28,34 மற்றும் 37 வயதானவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். வெலிகடை பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று இதனை கொள்ளையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஜனாதிபதி மாளிகை சம்பந்தமான விசாரணை மேற்கொண்டு வரும் கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டகாரர்கள் போல் மாளிகைகளுக்குள் புகுந்த திருடர்கள்
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஆகியவற்றை போராட்டகாரர்கள் முற்றுகையிட்டு அவற்றில் தங்கியிருந்தனர்.
இதன் போது போராட்டகாரர்கள் போல் மாளிகைகளுக்குள் சென்ற நபர்கள், அவற்றில் இருந்த தொன்மை வாய்ந்த பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.