6 முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடைகள்! ஹரீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாதுகாப்பு அமைச்சின் தடைப்பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் நேற்று (30.10.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த 6 அமைப்புகளின் தடைகளை நீக்கும் வகையில் முதற்கட்ட நடவடிக்கையாக முக்கிய பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளிடம் அண்மையில் கலந்துரையாடியுள்ளோம்.
தடை நீக்கப்பட்ட 6 அமைப்புக்கள்

தங்களது வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 11 முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 6 அமைப்புகள் எவ்வித பயங்கரவாத சம்பவங்களுடனோ பயங்கரவாத அமைப்புகளுடனோ தொடர்பைக் கொண்டிருக்கவில்லை எனவே, இவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென நானும் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மானும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எமது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

இதனடிப்படையில் தடை செய்யப்பட்ட குறித்த 6 அமைப்புகளின் முக்கியஸ்தர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் தனித்தனியே கலந்துரையாடியுள்ளனர்.
இந்த 6 முஸ்லிம் அமைப்புகளிடமிருந்தும் பாதுகாப்பு அமைச்சினால் சில ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.
அந்த ஆவணங்கள் கிடைத்தவுடன் அதிகாரிகள் அதனை பரிசீலனை செய்து 6 அமைப்புகள் மீதான தடையை நீக்கவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.