ஹிஸ்புல்லாவிற்கு அமைச்சு பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லா உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியக்குழு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று அனுப்பப்பட்ட அறிக்கையிலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை
அந்த அறிக்கையில் மேலும், “நாட்டில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு பங்களிப்பு செய்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏம்.ஏ.ஹிஸ்புல்லா நீண்டகால அரசியல் வரலாற்றை கொண்டவர்.

அதனால் இவரை மீண்டும் தேசியப்பட்டியலூடாக உள்வாங்கி முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் இலங்கை நாட்டுக்கு பல கோடி ரூபாய் பணங்களை அரபு நாடுகளில் இருந்தும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்தும் உதவியாக பெற்றுக்கொள்ளலாம்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தான் அரசியல் அதிகாரத்திலிருந்த காலங்களில் பல கோடிக்கணக்கான பணத்தை இலங்கை நாட்டுக்கு உதவியாக பெற்று கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் தனது சேவையை வழங்கியுள்ளார்.
நாட்டின் காலத்திற்கான தேவை
இனவாத, பிரதேசவாத அரக்கர்களை கொன்ற ஆட்சியாக மலரவிருக்கும் ஜனாதிபதி ரணிலை தலைமையாக கொண்ட இந்த அரசாங்கத்தில் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்ற மொழியாற்றல், திறமை, நாட்டுப்பற்று மிக்கவர்கள் அமைச்சர்களாக அல்லது அதிகாரம் பொருந்தியர்வர்களாக இருக்க வேண்டியது நாட்டின் காலத்திற்கான தேவையாக அமைந்துள்ளது” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.