மோடி - ஸ்டாலின் முக்கிய சந்திப்பு! ஏழு பேர் விடுதலை குறித்து ஆராய்வு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்.
தமிழகத்தில் புதிதாக யார் முதல்வராக பதவியேற்றாலும், உடனே டெல்லி சென்று அப்போதைய பிரதமரைச் சந்தித்து தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து கோரிக்கைவைப்பது ஒரு நடைமுறையாக இருந்துவருகிறது.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாட்டில் கோவிட் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்ததன் காரணமாக மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வது உடனடியாக நடைபெறவில்லை. ஆனால், விரைவில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலையில் தனிவிமானம் மூலம் காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
இந்தநிலையில், 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருவருக்குமான பேச்சுவார்த்தை 25 நிமிடங்கள் நீடித்தது. தமிழ்நாட்டின் கோரிக்கைகளை மோடியிடம் மனுவாக வழங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை, மேகதாது அணை, எய்ம்ஸ் மருத்துவமனை ஆகிய விவகாரங்கள் குறித்து மோடியிடம் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு, தமிழ்நாடு இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
