ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கை!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 வருடங்களுக்கும் மேலாக சிறை விடுதலை செய்யப்படாமல் இருக்கும் இலங்கை தமிழர்கள் உட்பட்ட 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அமைச்சரவை 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.
இதனையடுத்து தமிழ்நாடு ஆளுநருக்கு அந்த தீரமானம் அனுப்பப்பட்டது. எனினும் மாநில அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனை தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள தமிழக முதல்வர் இந்த அமைச்சரவை தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தை நாடாளுமன்றத்தின் திராவிட முன்னேற்றக்கழக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இன்று நேரில் சென்று கையளித்துள்ளார்.