நியூசிலாந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம்! - ஞானசார தேரர்
நியூசிலாந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம் என ஞானசார (தேரர் Gnanasara Thera) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அடிப்படைவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு ஜே.வி.பி ஆரம்பக் காலத்திலிருந்து ஒத்துழைப்பு வழங்குகிறது. இஸ்லாமிய மத பெயரால் செயற்படும் அடிப்படைவாத அமைப்புக்கள் குறித்து நாங்கள் குறிப்பிடும் கருத்துக்களுக்கு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவையற்ற வகையில் அரசியல் இலாபத்திற்காக கருத்துரைத்துக் கொள்கிறார்.
அரசியல் நோக்கத்திற்காக இஸ்லாமிய மத பெயரால் செயற்படும் அடிப்படைவாத அமைப்புக்களைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவதை ஜே.வி.பியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரிடம் வலியுறுத்துகின்றோம். அடிப்படைவாத கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர்கள் சமூகத்தில் சாதாரணமாகச் செயற்படுகிறார்கள்.
இவர்கள் தொடர்பில் எந்நேரத்திலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஒரு நாடு- ஒரு சட்டம் என்ற கொள்கையை உறுதிப்படுத்துவதற்காகவே மக்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கினார்கள்.
ஏப்ரல் குண்டுத்தாக்குதலின் அறிக்கையின் உள்ளடக்கங்களைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். இன்று தென்னிலங்கையிலும் அதேபோல வடக்கிலும் விண்ணைத்தொடும் அளவுக்குக் கோவில்களும் விகாரைகளும் உள்ளன.
ஆனால் அவற்றை அண்மித்த பிரதேசங்களில் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாத மக்களும் இருக்கின்றனர். அண்மையில் ஜெர்மனில் நியூஸிலாந்தில் நடந்ததுபோல கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அதுபோன்ற சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம்.
அதற்கு முன்னர் ஜமாத்தே உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்கள் தடைசெய்யப்பட வேண்டும். இதற்கு எதிராக சில பௌத்த பிக்குகள் உள்ளனர். அவர்களை முதலில் புணர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.