ரணில் அரசாங்கத்தால் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக பார்க்கப்படும் பூநகரி: சுட்டிக்காட்டும் சிறீதரன்
இலங்கையின் பல அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன, சில அமைச்சர்கள் காணாமல் போயுள்ளனர் பலர் புதிதாக வந்துள்ளார்கள், காலங்களும் அப்படித்தான் புதிய புதிய மாற்றங்களை நோக்கி நகர்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - பூநகரி பிரதேசசபையின் பொது நூலகத்தினுடைய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் இணைய நூலக திறப்பு மற்றும் சிறுவர் காட்சி கூடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (24.10.2023) நடைபெற்றுள்ளது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பூநகரி பிரதேசத்தின் முக்கியத்துவம்
அவர் மேலும் தெரிவிக்கையில், பூநகரி பிரதேசமானது ரணில் அரசாங்கத்தால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக பார்க்கப்படுகின்றது. அதாவது யாழ்ப்பாணத்துக்கு ரணில் விக்ரமசிங்க வந்தால் பூநகரி பற்றியே பேசுகின்றார்.
பூநகரியினுடைய கேந்திர முக்கியத்துவத்தை நாங்கள் உணர்வதற்கு முன்னரே அவர்கள் உணர்ந்து இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
பூநகரி பிரதேசசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் முன்னதாக விருந்தினர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் இணைந்து வாசிப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பூநகரி வாடியடி சந்தியிலிருந்து பிரதேசசபை வரை விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.