பயங்கரவாத தடுப்பு சட்டம் நீக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்ட சிறிநேசன்
வருகின்ற மாதத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுபட்டைக் கிராமத்திற்கு நேற்று(24.08.2025) மாலை விஜயம் செய்திருந்த அவர், அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வருகின்ற மாதத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படும் என நான் நம்புகின்றேன். கடந்த நாடாளுமன்ற அமர்வின் போதும் நாம் திட்டவட்டமாக இதனை கேட்டிருந்தோம்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு உத்தரவாதம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது மனித குலத்திற்கு பயங்கரமான அபாயத்தை ஏற்படுத்துகின்ற சட்டம். இலங்கைக்கு அவமானத்தை ஏற்படுத்துகின்ற ஒரு சட்டம். அந்த சட்டத்தை விரைவில் அகற்ற வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தொடக்கம் கடந்து வந்தவர்கள் இச்சட்டத்தை அகற்றாமல் அந்த கொடிய சட்டத்தின் மூலமாக அரச பயங்கரவாதத்தை செய்திருந்தார்கள்.
தற்போதைய அரசாங்கம் இந்த சட்டத்தை நீக்குவதன் மூலமாக ஒரு பெருமையைத் தேடிக் கொள்ளும் என்ற விடயத்தை நாம் கூறியிருந்தோம். வருகின்ற மாதத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு அவர்கள் உத்தரவாதம் கொடுத்து விட்டதாக கூறியிருக்கின்றார்கள்.
நாங்களும் நம்புகின்றோம். அந்த சட்டத்தை அகற்றிவிட்டு அதற்கு சமமான இன்னுமொரு சட்டத்தை கொண்டுவர கூடாது என்றும் நாங்கள் தெரிவித்தோம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



