மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா (PHOTOS)
இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான புடைசூழ இன்று நடைபெற்றது.
தீர்த்தம்,மூர்த்தி,தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தேர் உற்சவம்
இன்று காலை பஞ்சமுக கணபதிக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பஞ்சகமுக கணபதி பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் தேரடிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
பூஜைகளை தொடர்ந்து ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இராம பிரான் பிரம்மகர்த்தி தோசம் நீங்க வழிபட்ட ஆலயமாகவும் அனுமானின் வாலில் வைக்கப்பட்ட தீயினை அணைத்த ஆலயம் என்ப பெருமையினைக்கொண்ட ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நாளை நடைபெறவுள்ளது.
இன்றைய தேர் உற்சவத்தில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.


