ஸ்ரீலங்கன் விமான சேவை குறித்து அரசாங்கத்தின் அதிரடி முடிவு!
ஸ்ரீலங்கன் விமான சேவையை பொது-தனியார் கூட்டு கூட்டுறவு (PPP) மாதிரியின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர குமாரதிலக்க தெரிவித்துள்ளார்.
விமான சேவையை தொடர்ந்து நடத்துவதற்காக மக்களின் வரிப்பணத்தை பெருமளவில் பயன்படுத்துவது இனிமேலும் சாத்தியமற்றது என்பதால் இந்த தீர்மானம் குறித்து கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய விமான சேவையை இயங்கு நிலையில் வைத்திருப்பதற்காக அரசாங்கம் பாரிய நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2030ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு சுமார் 30 பில்லியன் ரூபா வீதம், மொத்தம் 90 பில்லியன் ரூபாவை விமான சேவைக்காக ஒதுக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போதைய செயல்பாடுகளைத் தொடர்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை மேலும் 10 பில்லியன் ரூபாவை மேலதிகமாகக் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை மேலும் தொடர முடியாது. விமானத்தை நேரில் கூட பார்த்திராத சாதாரண மக்கள் கூட தங்களின் வரிப்பணம் மூலம் இந்த விமான சேவையை பராமரிக்க பங்களிப்பு செய்கிறார்கள். இது முற்றிலும் அநீதியானது என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பொது-தனியார் கூட்டு மாதிரிக்கு செல்ல முடிவெடுத்துள்ள போதிலும், விமான சேவையை முழுமையாக தனியார்மயமாக்கப் போவதில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவசர காலச் சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு தேசிய விமான சேவையில் அரசாங்கத்தின் பங்களிப்பு ஓரளவாவது இருப்பது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சீனாவில் தவித்த இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்தமை மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட வீதி விபத்தொன்றின் போது அங்கு சிக்கியிருந்த இலங்கை பாடசாலை மாணவர்களை மீட்க விசேட விமானங்களை ஏற்பாடு செய்தமை போன்ற சம்பவங்களை உதாரணமாக கூற முடியும் என தெரிவித்துள்ளார்.
விமான சேவையின் தற்போதைய அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை அப்படியே தக்கவைத்துக் கொண்டு, கூட்டுப் பங்காளித்துவக் கட்டமைப்பின் கீழ் தனியார் முதலீடுகளைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக முதலீட்டு முன்மொழிவுகள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், முதலீட்டாளர்களை அழைக்கும் செயல்முறையைக் கையாள்வதற்காக ஒரு நிறுவனம் பொறுப்பளிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்திற்குள் தேவையான முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் அநுர குமாரதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.