பெருந்தொகை நட்டத்தை பதிவு செய்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்
2024/2025 நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 7.6 பில்லியன் ரூபா நிகர நட்டத்தைப் பதிவு செய்துள்ளது. 2024/2025 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்டுள்ள வருடாந்த செயற்பாட்டு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், குறித்த நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 296.5 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
வருமானம் வீழ்ச்சி
விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள், புவிசார் அரசியல் நெருக்கடிகளால் அதிகரித்த எரிபொருள் நுகர்வு, எயார்பஸ் விமானங்களின் இயந்திரக் கோளாறுகளால் உலகளாவிய ரீதியில் விமானப் பயணங்கள் தடைப்பட்டமை மற்றும் உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையினால் கட்டாய பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் போன்றவையே வருமானம் வீழ்ச்சியடையக் காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நாணய மாற்று வீதங்களில் ஏற்பட்ட தாக்கம், கொள்ளளவு வரையறைகள் மற்றும் உலகளாவிய ரீதியில் வருமானம் குறைவடைந்தமை ஆகிய காரணங்களால், 2023/2024 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2024/2025 நிதியாண்டில் பயணிகள் மூலமான வருமானம் 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்படாத இயந்திர திருத்தச் செலவுகளான 2.2 பில்லியன் ரூபா மற்றும் நிகர நிதிக் கட்டணங்களான 31.6 பில்லியன் ரூபா ஆகியவற்றைக் கணக்கிட்ட பின்னரே இந்த 7.6 பில்லியன் ரூபா நிகர நட்டம் பதிவாகியுள்ளது.