வவுனியாவில் அதிகரிக்கும் இளைஞர் குழுக்களின் வன்முறை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்
வவுனியா - மன்னார் பிரதான வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (17.11) இரவு 9 மணிக்கு பின்னர் சுமார் ஒருமணி நேராமாக குறித்த இளைஞர் குழு அவ் வீதியால் பயணிப்பவர்களை வழிமறித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
வீதியின் குறுக்கே தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளதுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அருகிலுள்ள வீடுகளில் வசித்தோர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்போதே குறித்த இளைஞர் குழுவினர் அப்பாதையூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியினை சேர்ந்த ஆசிரியரென தெரியவந்துள்ளதுடன் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வவுனியா வைரவர் கோவில் வீதி, கதிரேசு வீதி, மன்னார் வீதி ஆகிய
பகுதிகளில் அண்மைக் காலமாக இளைஞர் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்து செல்வதாக
அப் பகுதி மக்கள் முறைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
