மரணிக்கும் முன்னர் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுங்கள்! சிவாஜிலிங்கம் வேண்டுகோள்
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மோசமடைவதால் மரணம் சம்பவிக்கும் முன்னர் அவர்களை பிணையில் விடுவிக்கும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 12 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களில் ஐந்து பேர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய கிடைக்கின்றது.
மோசமடையும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்படும் சிங்களவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதும்,மரண தண்டனை விதித்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதும்,கொலை குற்றச்சாட்டுகளில் கைது செய்பவர்களுக்கு பிணை வழங்குவதும் இடம்பெற்று வருகின்றது.
தற்போது சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் கைதிகள் ஆகக்குறைந்தது தங்களை பிணையிலாவது விடுவிக்குமாறு கோருகின்றார்கள். தமது உறவுகள் சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்ற நிலையில் அவர்களின் உறவுகள் வீடுகளில் உறவினர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ஆகையால் அவர்களின் குடும்பத்துக்கோ அல்லது சிறையில் உண்ணாவிரதத்தில்
ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்து மரணம் ஏற்படுவதற்கு
முன்னர் அவர்களுக்கு பிணை வழங்குவதற்கான உத்தரவாதத்தை சம்பந்தப்பட்டவர்கள்
வழங்க முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.