நாமலின் நெருங்கிய சகாக்களை தன்வசப்படுத்திய ரணில்! ராஜபக்சவினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் இருவர் ஜனாதிபதியின் அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முகப்புத்தகத்தில் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரணில் விக்ரமசிங்க தற்போது இங்கிலாந்து பயணமாகியுள்ள நிலையில், நாமலின் நண்பர்களே தற்போது பதில் அமைச்சர்களாக ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் செயற்பாடுகளை அவதானித்து வருகின்றனர்.
பொதுஜன பெரமுனவிலிருந்த இந்த இளைஞர்கள், முன்பு மகிந்தவின் கட்டுப்பாட்டில் தேசிய உடை அணிந்து செயற்பட்டவர்கள்.ஆனால் தற்போது ரணிலில் கட்டுப்பாட்டில் கோர்ட்சூட் போடுகின்றார்கள்.
நாமலுடன் ஆங்கிலம் பேசும் சர்வதேச பாடசாலையில் படித்த இவர்கள் சுலபமாக ரணிலுடன் ஒட்டிக்கொண்டார்கள். இந்த விடயத்தில் நாமல் ராஜபக்ச கடும் கோபத்தில் உள்ளார்.
ஜனாதிபதியின் தேர்தல் வியூகங்கள்
ஜனாதிபதி தற்போது தேர்தல் வியூகங்களை ஆரம்பித்துள்ள நிலையில்,"ரணில் ராஜபக்ச" என கூச்சலிட்ட ஹிருணிகா மூலையில் ஒளிந்து இருக்கின்றார்.
இருப்பினும், நமது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர், ரணில், ராஜபக்சர்களை காப்பாற்றத்தான் பிரதமர், ஜனாதிபதி பதவிகளை பொறுப்பேற்றார் என்ற பழைய பல்லவியையே பாடுகின்றார்கள்.
நான் தான் எப்போதும் ஒன்றை திரும்ப, திரும்ப சொல்கின்றேன். "ரணில் யாரையும் பாதுகாக்கபோவதில்லை. அவர் தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள தான் அரசியலுக்கு வந்தார்.
2005 ஆம் ஆண்டு சதி காரணமாக பறிபோன ஜனாதிபதி பதவியை, ரணில் தேடிப்பெற்றுள்ளார். சதி செய்த மகிந்தவே அதனை ரணிலுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தது காலத்தின் விளையாட்டு.தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி ரணில் நகர்கின்றார்.
ஆகவே, ரணிலை எதிர்ப்பதானால் அவரை "ரணில் விக்ரமசிங்கவாகவே நினைத்து எதிர்க்க வேண்டும் என சஜித் பிரேமதாசவிற்கு கூறியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.



