உயர் அதிகாரிகளை தூண்டி தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சி - இம்ரான் எம்.பி
உயர் அதிகாரிகளுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடிகள் கொடுத்து அவர்களை தூண்டி தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சிக்கின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்துள்ளதாவது,
கடந்த 6 மாத காலத்தினுள் வாழ்க்கை செலவு 300 வீதம் அதிகரித்துள்ளது. எனினும், அரச உத்தியோகத்தர்கள் யாருக்கும் எவ்வித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை.
எனவே, இந்தப் பாரிய சுமையை பல சிரமங்களுக்கு மத்தியில் அரச ஊழியர்கள் சுமந்து வருகின்றனர். இந்நிலையில் முன்னைய வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பசில் ராஜபக்ச உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொலைபேசி கொடுப்பனவில் 25 வீதம் குறைத்துள்ளார்.
எரிபொருள் கொடுப்பனவு
எரிபொருள் கொடுப்பனவையும் குறைத்தார். இந்த குறைப்புகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளித்துக்கொண்டு காலம் கடத்தும் நிலையில் இந்த உயர் அதிகாரிகளின் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளில் இருந்து வரி அறவிடும் திட்டத்தை இந்த அரசாங்கம் தற்போது அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால் எல்லா உயர் அதிகாரிகளும் பெருமளவு வரி மாதாந்தம் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு மாதாந்தம் வழங்க வேண்டிய சம்பளத்தையும் உரிய திகதியில் அல்லாமல் பிந்திக்கொடுக்கும் திட்டம் உள்ளதாக தற்போது அசாங்கம் அறிவிக்கின்றது.
இதன் பின்னணி என்ன? அரச உயர் அதிகாரிகளுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தி அவர்களைத் தூண்டும் சதி முயற்சியை இதன் மூலம் இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்பது மிகத் தெளிவாகும்.சம்பளத்தில் வரி. இதர கொடுப்பனவுகளில் வரி. பாவிக்கும் அரச வாகனத்துக்கு பெறுமதி வரி. வசிக்கும் விடுதிகளுக்கு பெறுமதி வரி. இப்படி அதிகாரிகளின் சட்டைப்பைக்குள் கையை வைத்து அவர்களது வருமானங்களை உறிஞ்சும் செயற்பாடு.
இது உயர் அதிகாரிகளின் தொழிற்சங்கங்களைத் தூண்டி அவர்களை பணிப்பகிஸ்கரிப்பு முயற்சியில் ஈடுபடவைத்து தேர்தல் நடவடிக்கைகளைச் சீர்குலைக்க எடுக்கப்படும் சதி முயற்சியாகும்.
தேர்தலுக்கு முகங்கொடுக்க அஞ்சி குலை நடுக்கத்தில் இருக்கும் அரசாங்கத்தினால் தேர்தலை சட்ட ரீதியாக எவ்வகையிலும் ஒத்திவைக்க முடியாது. எனவே, வேறு எவ்வகையிலாவது ஒத்திவைக்க வேண்டும் என கங்கனம் கட்டும் இந்த அரசாங்கத்தின் ஒரு வகை சதி முயற்சி இதுவாகும்.
இவ்வளவு காலம் இல்லாத இந்த புதுமையான வரிமுறைமையை அரசாங்கம் இப்போது அமுல்படுத்த துடிக்கும் நோக்கம் என்ன என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
சகல அரச உத்தியோகத்தர்களும், பொது மக்களும் இந்த அரசாங்கத்துக்குக்கு சரியான
பாடம் கற்பிக்கும் ஒரு தளமாக இந்தத் தேர்தலை அணுக வேண்டும். தமது வாக்குகளைப்
பயன்படுத்தி இந்த அரசாங்கத்தை மிக மோசமாக தோல்வியடையச் செய்ய வேண்டும்
என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
