கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தற்போது மற்றுமொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருந்த காலம் முதல் நடந்த போராட்டத்தின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இலங்கைக்கு திரும்பிய அவர் தங்குவதற்கு கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பிரதான வீதிக்கு முன்பாக கட்டப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளது.
கோட்டாபயவின் மிரிஹானையில் உள்ள தனியார் இல்லத்தின் பாதுகாப்பு நிலைமை போதுமானதாக இல்லையென தெரிவித்து பாதுகாப்பு தரப்பினர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி கோட்டாபய இலங்கைக்கு வந்த நாள் முதல் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, தொடர்ந்து வாகனங்களின் சத்தமும், அவற்றின் ஹாரன்களும் ஒலித்ததால், கோட்டாபயவுக்கு அந்த வீட்டில் வசிப்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
அதிகாரிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை
இதன் காரணமாக இந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பதிலாக வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு கோட்டாபய பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இது தவிர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த தங்கியிருந்த விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், மகிந்த அங்கு சென்ற பின்னர், அதுவரை தங்கியிருந்த புல்லர்ஸ் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்ல கோட்டாபய தீர்மானித்துள்ளார்.
இருப்பினும், பல்வேறு காரணங்களால் அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால், கடந்த வாரம் கோட்டாபய விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது அவருக்குப் பழக்கமான மிரிஹானையில் அமைந்துள்ள வீட்டில் அமைதியான சூழலில் தங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.