100 ரூபாவுக்காக சிறுவன் மீது கொடூர தாக்குதல்! 7 மணிநேர முயற்சியால் காப்பாற்றிய வைத்தியர்கள்
பதுளை வைத்தியசாலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுவனை சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழாமினர் சுமார் 7 மணிநேர சத்திரசிகிச்சையின் பின்னர் காப்பாற்றியுள்ளனர்.
கந்தகெட்டிய - களுகஹகந்துர, வெந்தேசியாய கிராமத்தைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுவன், நேற்று மாலை தனது தந்தைக்கு தொலைபேசி மீள் நிரப்பு அட்டையை வாங்கி வருவதற்காக கடைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, வீதியில் நின்றிருந்த நபர் ஒருவர் சிறுவனிடம் இருந்த 100 ரூபா பணத்தை பெற்றுக்கொள்வதற்காக அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக சிறுவனின் தாய் தெரிவித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவன் மீது கொடூர தாக்குதல்
குறித்த தாக்குதலில் சிறுவனின் தோற்பட்டை மற்றும் மார்புப் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், கூரிய ஆயுதம் நுரையீரல் வரை ஊடுருவியிருந்ததாகவும், வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த சிறுவன் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை சுமார் 7 மணித்தியாலங்களாக தொடர்ந்து அதிகாலை 3 மணிவரை வைத்தியர்கள் போராடி சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர் 51 வயதானவரெனவும்,பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவரெனவும்,சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.