27 மில்லியனுக்கு பதிலாக அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக வீதி
கடந்த சில தினங்களுக்கு முன், வாகரை கட்டுமுறிவு பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் போக்குவரத்துக்கு முக்கியமான வீதியில் அமைந்துள்ள பாலத்தினை உடனடியாக செப்பனிட்டு தருமாறு போராட்டமொன்றை நடாத்தியிருந்தனர்.
மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, தற்காலிகமாக குறுக்கு பாதையொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், வாகரை பொலிஸ் அத்தியட்சகருக்கு குறித்த வீதி செப்பனிடப்படாமையால் எதிர்நோக்கும் விபரீதங்கள், பிள்ளைகளின் கல்வி பாதிப்புக்கள் என்பவற்றை முறையிட்டிருந்தனர்.
இந்நிலையில் சுமார் 27 மில்லியன் ரூபாய் பணம் குறித்த பாதைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், திடீரென பொருட்கள் காணமல்போயுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து பால புனரமைப்பு பணிகளும் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக கோபமுற்ற பிரதேசவாசிகள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனுக்கு எதிராக மழைவெள்ளத்தையும் பொருட்படுத்தாது போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்ததுடன், இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு வெளிநாடொன்றிலிருந்து இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன் அவருடைய நிலைப்பாட்டை தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஒரு தற்காலிக வீதி அமைக்கப்பட்டு, அந்த பிரேதச மக்களின் போக்குவரத்துப் பிரச்சினை சீர்செய்யப்பட்டுள்ளது.
எது எவ்வாறாக இருந்தாலும் குறித்த பாலத்துக்கென ஒதுக்கப்பட்ட 27 மில்லியன்
பணத்துக்கும் வேலை செய்யவென கொண்டு வரப்பட்ட பொருட்களுக்களுக்கும் என்ன நடந்தது என்று
இதுவரை தகவலெதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



