வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை கோடீஸ்வர தொழிலதிபர் - இந்தோனேசியா விரையும் விசேட பொலிஸ் குழு
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று இந்தோனேசியா செல்லவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 02 ஆம் திகதி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் கொலையின் பின்னர், ஒனேஷ் சுபசிங்கவின் பிரேசிலைச் சேர்ந்த மனைவியும், அவருக்கு உதவியாளராகக் கூறப்படும் பிரேசில் நாட்டுப் பெண்ணும் நான்கு வயது மகளுடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
ஜகார்த்தா பொலிஸ் விசாரணையில் அந்த கும்பல் கத்தாருக்கு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
ஜனவரி 20ஆம் திகதி, விடுமுறைக்காக தனது மனைவி, மகள் மற்றும் மனைவியின் உதவியாளருடன் ஒனேஷ் இந்தோனேஷியா சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த கொலை இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ள போதிலும், கொலைக்கான ஏற்பாடுகள் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரியவருவதால், பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற நடவடிக்கை
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எதிர்கால விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெறத் தயாராகியுள்ளமையினால் விசேட பொலிஸ் குழுவொன்று இந்தோனேசியா செல்லவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருமான 45 வயதான ஒனேஷ் சுபசிங்க சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஜகார்த்தா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.