இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வெளிநாடொன்றில் சடலமாக மீட்பு! விசாரணையில் வெளியான தகவல்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருமான 45 வயதான ஒனேஷ் சுபசிங்க நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சுபசிங்க தனது பிரேசிலிய மனைவி, அவரது 4 வயது மகள் மற்றும் மற்றொரு அடையாளம் தெரியாத பிரேசிலியப் பெண் ஆகியோருடன் ஜகார்த்தாவிற்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை
சுபசிங்க கடைசியாக கடந்த செவ்வாய்க் கிழமை (02) கொழும்பில் உள்ள தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு தொடர்பு இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சுபசிங்கவை விசாரிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் பலமுறை முயன்றும் அறையின் கதவு திறக்கப்படாததால், நிர்வாகத்தினர் கதவை உடைத்து அறைக்குள் நுழைந்து சோதனையிட்ட போது சுபாசிங்கின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
இதன்போது குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட போது சுபசிங்காவின் மனைவி, மகள் மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஆகியோர் செவ்வாய்கிழமை வாசலில் 'தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற பலகையை வைத்துவிட்டு அந்த குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தின் பின்னர் ஜகார்த்தாவிற்குச் சென்ற மூவரும் செவ்வாய்க்கிழமை தோஹாவிற்கு விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
கொலையென பொலிஸார் சந்தேகம்
சம்பவம் குறித்து ஜகார்த்தா பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன், இந்த சம்பவம் கொலை என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த சுபசிங்க அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளதாக ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
முதலீடுகள், கல்வி மற்றும் அனுபவம் பற்றிய அவரது அறிவு OPEX ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சாதனைகளை கொண்டு வந்துள்ளது.
OPEX நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு விசேட திரவ உரங்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் முதலாவது நிறுவனமாகும், மேலும் இலங்கையின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து முகாமைத்துவத் துறையில் முன்னோடியாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.