முழு வருட செலவீனத்தை விட நான்கு மாதங்களில் அதிக கடனை பெற்றுள்ள இலங்கை
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கையால் பெறப்பட்ட கடன் தொகையானது முழு வருட அரசாங்க செலவீனத்தை விட அதிகமாகும் என தெரியவந்துள்ளது.
இந்த விடயத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஆய்வில் வெளியான தகவல்
ருகுணு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் கலாநிதி நந்தசிறி கெய்ம்பியஹெட்டி தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் அரசாங்கத்தின் மொத்த கடன் 17 இலட்சத்து 58ஆயிரத்து 900 கோடி ரூபா ஆகும்.
ஏப்ரலுக்குள் அதிகரித்த கடன்
இவ்வருடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த தொகையானது 23 இலட்சத்து 31ஆயிரம் கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் அரசாங்கத்தின் நிகர கடன் அதிகரிப்பு 5இலட்சத்து 72ஆயிரம் கோடி ரூபாவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.