எரிபொருளை ஆபத்தான முறையில் வெளியேற்ற வேண்டாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது கடும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதால் எரிபொருள் வரிசைகளில் காத்திருப்போர் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாகன சாரதிகள் வாய்மூலமாக வாகனங்களிலிருந்து பெட்ரோலை வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும்,நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கபிலானி வித்தானாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் பணியாற்றிய 30 வயதுடைய வைத்தியர் ஒருவர் தனது காரில் இருந்து குழாய் ஊடாக வாய்மூலமாக மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை பெற முயற்சித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வைத்தியரின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்
வைத்தியரின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேறு நோய்களால் பாதிக்கப்படாத,புகைப்பழக்கமற்ற வைத்தியரின் நுரையீரலுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டதென்பது குறித்து மேற்கொண்ட பரிசோதனையில் சில காரணங்கள் தெரியவந்துள்ளது.
அண்மைக் காலமாக பெட்ரோல் வரிசையில் காத்திருந்த அவர், சரியாக உணவு உட்கொண்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது. மழையிலும், வெயிலிலும் அவர் வரிசையில் காத்திருந்துள்ளார்.
அத்துடன், ஒரு வாகனத்திலிருந்து இன்னுமொரு வாகனத்திற்காக, வாய்மூலம் எரிபொருளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலில் உள்ள இரசாயனத்தினால், நுரையீரல் பாதிக்கப்படலாம். பற்றீரியா அல்லது வைரஸ் உடலினுள் சென்றால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
எனவே வாகனங்களை பயன்படுத்துவோர் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.