கிளிநொச்சி அரச பேருந்து சாலையை முற்றுகையிட்டுள்ள தனியார் பேருந்து சேவையினர் (VIDEO)
டீசல் வழங்குமாறு தெரிவித்து கிளிநொச்சி அரச பேருந்து சாலையை தனியார் பேருந்து சேவையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
அரச பேருந்து சாலையின் பிரதான வீதியை மூடி இன்று முற்பகல் போராட்டம் ஒன்று தனியார் பேருந்துரிமையாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பர கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்து கலந்துரையாடி சுமுகமான நிலைக்கு கொண்டுவந்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் மறுப்பு
தனியார் பேருந்து சேவையினர் சேவைக்கு தேவையான எரிபொருளை அரச பேருந்து சாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு அறிவித்த நிலையில், எரிபொருளை கிளிநொச்சி சாலையினர் வழங்குவதில்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமது சேவையை முன்னெடுக்க எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு சென்றால், அங்கு டீசல் தர மறுப்பதாகவும், அரச பேருந்து சாலைகளில் பெறுமாறு தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கிடைப்பதாகவும், அதில் தனியார் சேவையினருக்கு வழங்க முடியாதுள்ளதாகவும் அரச பேருந்து சாலையினர் தெரிவிக்கின்றனர்.
தனியார் பேருந்துகளுக்கு தனி வரிசை
இரு தரப்புடனும் பேசிய பொலிஸார், தனியார் பேருந்துகளை தனி வரிசைக்குட்படுத்துமாறும், ஏனைய வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் போது 10 வாகனங்களிற்கு பின் ஒரு பேருந்து எனும் அடிப்படையில் எரிபொருளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் நிலைமை சுமூகமடைந்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் அமைச்சின் முடிவுக்கமைவாக அரச பேருந்து சாலைகளில் டீசல்
வழங்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில் மாத்திரம் மாறுபட்ட நிலை
காணப்படுவது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.