இலங்கையில் உணவு விலையேற்றங்களுக்கான காரணங்கள் என்ன? பேராசிரியர் ஒருவரின் விளக்கம்(photos)
உணவு மற்றும் உணவல்லா பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களே இலங்கையில் பணவீக்க அதிகரிப்புக்கான காரணம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதில் உணவு வகைகளில் அரிசி, உடன் பழங்கள், பால்மா மற்றும் பாண் என்பவற்றில் விலை அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது.
உணவல்லா பொருட்களில் பெற்றோல், டீசல், பேரூந்துக்கட்டணம், வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, வீட்டு வாடகை, கற்கை நெறிக்கட்டணங்கள் என்பன அதிகரித்துள்ளன.
இதன்படி, 2021 டிசம்பரில் 12.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் 2022 ஜனவரியில் 14.2ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் 2021 டிசம்பரில் 6 சதவீதத்தில் இருந்து 2022இல் 6.9வீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மத்திய வங்கியின் இந்த அறிக்கை தொடர்பாக எமது செய்திச்சேவை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, உணவு உணவில்லாத பொருட்களின் விலையுயர்வுக்கான காரணங்களை விளக்கினார்.
நாட்டில் உற்பத்தி குறைகின்றபோது, பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்படும்.
இந்தநிலையில் அந்த பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படவேண்டும்.
எனினும் இறக்குமதிக்கான டொலர் இல்லாதபோது உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உற்பத்திக்கு மேலதிகமாக பணத்தை அச்சிடும் போதும் அது பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.




