இடைக்கால நிதியுதவியாக 850 மில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கும் இலங்கை!
இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் அல்லது வேறு சில நன்கொடை நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக 850 மில்லியன் அமெரிக்க டொலர்களை இடைக்கால நிதியுதவியாக பெற்றுக்கொள்வதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது.
வெளிநாட்டு நிதியுதவி
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைக்கும் வரை, ஆறு மாத காலத்துக்கான நிதியை பெற இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
2022ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வெளிநாடுகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுடன் எட்டு ஒப்பந்தங்களை செய்துகொண்டதன் மூலம் 1.87 பில்லியன் டொலர் வெளிநாட்டு நிதியுதவியை இலங்கை ஏற்கனவே பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் நிதியுதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கு சாதகமாக பதிலளித்துள்ளன.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை, நிதி நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வரை இலங்கைக்கு கடன் வழங்க இயலாது என்று ஏற்கனவே தெரிவித்துள்ளன.
ஆனால் அந்த இரண்டு அமைப்புங்களும் இலங்கைக்கு உதவ மாற்று வழிகளை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.