மின்சார சபையின் முன்மொழிவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தொழிற்சங்கங்கள்
தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டணத்தை எதிர்வரும் 6 மாதங்களுக்கு அவ்வாறே பேண முடியும் என்று இலங்கை மின்சார சபை(Ceylon Electricity Board), பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில் மின்சார சபையின் இந்த முன்மொழிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
மின் உற்பத்தி
ஐக்கிய தொழிற்சங்க மற்றும் மின் பாவனையாளர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித இது தொடர்பில் தெரிவிக்கையில்,
"இலங்கை மின்சார சபை விலைச் சூத்திரத்தால் 200 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. தற்போது நீர்த் தேக்கங்கள் நிரம்பி வழிந்தோடுகின்றதால் குறைந்த செலவிலேயே மின் உற்பத்தி இடம்பெறுகின்றது.
எனவே, உடனடியாக மின்சாரக் கட்டணத்தைக் குறைக்குமாறு தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளரான ரஞ்சன் ஜயலால் கூறினார்.
அதுமாத்திரமின்றி டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் விசேட கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இவற்றை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து 30 சதவீதத்தால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதன் ஊடாக அரசுக்கு எந்த வகையிலும் நட்டம் ஏற்படப் போவதில்லை.
காரணம் தற்போது மின் அலகுகளுக்கு வரி அறவிடப்படுவதில்லை. ரஞ்சன் ரஞ்சன் ஜயலால் கூறியதைப் போன்று மின்சார சபை 200 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது.
மின் கட்டணம்
எனவே, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாவதற்கு முன்னரும், அதன் பின்னரும் கூறியதைப் போன்று 3 ஆயிரம் ரூபாவாகக் காணப்படும் மின் கட்டணத்தை 1000 ரூபாவாகக் குறைக்க வேண்டும்.
மின் கட்டணத்தில் 35 சதவீத நிவாரணத்தைத் தற்போது மின்சார சபையால் பாவனையாளர்களுக்கு வழங்க முடியும். தொழிற்சங்கத் தலைவராக இருந்த வசந்த சமரசிங்க இன்று வர்த்தக அமைச்சராகவுள்ளார். இவர் ஜனாதிபதியின் கூற்றை சவாலுக்குட்படுத்தும் வகையில், மூன்று ஆண்டுகளின் பின்னரே மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க முடியும் என்று கூறுகின்றார்.
வர்த்தக அமைச்சர் ஜனாதிபதியையும், மக்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை விடுத்து, இம்மாதம் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்றார்.
வாக்களித்த மக்கள்
அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ச குமார குறிப்பிடுகையில்,
"தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 3000 காணப்படும் மின்சாரக் கட்டணத்தை 1000 ரூபாவாகக் குறைப்பதற்கு நீங்கள் விரும்பவில்லையா என்று அன்று மக்களிடம் கேட்டார்.
அதனை அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான உங்களின் திட்டமிடல் எங்கே? உங்களுக்கு வாக்களித்த மக்களை மறந்து விட்டீர்களா என்று ரஞ்ஜன் ஜயலாலிடம் கேட்கின்றோம்.
மக்களுக்காகவும், மின்சார பாவனையாளர்களுக்காகவும் ஏன் குரல் கொடுக்காமலிருக்கின்றீர்கள்?" - என்றார்.
திசைக்காட்டி அரசாங்கம்
மின்சார பாவனையாளர்களின் சங்கத் தலைவர் ஏ.ஆர்.அதுல தெரிவிக்கையில்,
"ஆட்சிக்கு வர முன்னர் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க முடியும் என்று தேசிய மக்கள் சக்தியினர் குறிப்பிட்டனர்.
ஆனால், ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களையே இந்தத் திசைக்காட்டி அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கின்றது.
மின் கட்டணத்தை உடனடியாகக் குறைக்குமாறு அன்று தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்த வசந்த சமரசிங்க போன்றோர் வீதிக்கு இறங்கி போராடினர். இன்று அவர்கள் எங்கிருக்கின்றனர்? ரஞ்ஜன் ஜயலால் போன்றவர்களைக் கண்டுபிடிக்கவும் கடினமாகவுள்ளது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |