இலங்கைக்கு ஏனிந்த நிலை! மனவேதனையில் ஹர்ச டி சில்வா
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து மனவேதனைப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதையோரங்களில் நீண்ட வரிசைகளில் நாட்கணக்கில் காத்திருக்கும் பொதுமக்களைக் காணும் போது மனதில் ஒரு அழுத்தமும் மனவேதனையும் உண்டாகின்றது. அவ்வாறு துன்பப்படும் மனிதர்களின் முகங்களை எவ்வாறு ஏறெடுத்துப் பார்ப்பது என்றுதான் தெரியவில்லை.
இந்த நாட்டுக்கு என்ன நடந்துள்ளது? இப்படி நடக்கும் என்று யாராவது கனவிலேனும் நினைத்திருப்பார்களா?
இந்த நாட்டுக்கு என்ன நடந்துள்ளது?
இலங்கையில் தற்போதைக்கு மருத்துவ பட்டப்படிப்பை முடித்து இறுதியாண்டு பரீட்சையை எழுதும் பட்டதாரிகள் அதனுடன் சேர்த்து இங்கிலாந்தில் தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கான பரீட்சைக்கும் முகம் கொடுக்கின்றனர்.
தங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்தவுடன் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதில் தான் இன்று பெரும்பாலானவர்கள் நாட்டம் கொண்டுள்ளனர்.
நாடு அந்தளவுக்கு பொருளாதார, அரசியல் ரீதியாக வீழ்ச்சியடைந்து விட்டது என்றும் ஹர்ச டி சில்வா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.