கடும் சனநெரிசல்! இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தை இடையில் நிறுத்தி சென்ற சாரதி (PHOTOS)
வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் ஊடாக செட்டிகுளம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தில் ஏற்பட்டுள்ள அதிக சனநெரிசல் காரணமாக பேருந்தை இடை நடுவே சாரதி நிறுத்திச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் ஊடாக செட்டிகுளம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தில் அதிக சனநெரிசல் ஏற்பட்டு பேருந்தில் பலர் தொங்கிக்கொண்டு பயணித்தமையால் பேருந்தை இடைநடுவே நிறுத்து விட்டு சாரதி இறங்கிச் சென்றுள்ளார்.
பேருந்து இடை நிறுத்தப்பட்டமைக்கான காரணம்
வவுனியாவில் இருந்து புறப்பட்ட பேருந்து மாலை 6.40 மணியளவில் பட்டானிச்சூர் பகுதியை அடைந்த போது சாரதி வாகனத்தை செலுத்த முடியாது என தெரிவித்து பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றதுடன், அது குறித்து இ.போ.சபை முகாமையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக வவுனியா - செட்டிகுளம் வரையிலான போக்குவரத்தை தனியார் பேருந்துகள் இடை நிறுத்தியுள்ளதுடன், இ.போ.சபை பேருந்துகளின் சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியாவில் இருந்து பூவசரன்குளம் ஊடாக பயணித்த இன்றைய இறுதிப்பேருந்தில் வவுனியா நகரில் கற்றல் செயற்பாடுகளுக்கு வந்தோர், வேலைக்கு வந்தோர், தேவை கருதி வந்தோர் என பலரும் செட்டிகுளம் திரும்பிச் செல்ல பேருந்துக்கு காத்திருந்தனர்.
வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.சபை பேருந்து இலுப்பையடியை அடைந்த போது பேருந்துக்குள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற பயணம்
இதனையடுத்து பேருந்து மன்னார் வீதி, குருமன்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிய போது பேருந்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதுடன், இளைஞர்கள் பலரும் இடமின்றி பேருந்தின் பின்புறத்திலும், வாயில் பகுதியிலும் தொங்கியபடி பயணித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பேருந்து பட்டானிச்சூர் பகுதியை அடைந்த நிலையில், பாதுகாப்பற்ற வகையில் பயணிகளை கொண்டு செல்ல முடியாது எனத் தெரிவித்து இடைநடுவில் பேருந்தில் இருந்து இறங்கி சாரதி சென்றுள்ளதுடன்,சாலை முகாமையாளருக்கும் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து இது குறித்து சாலை முகாமையாளருக்கு தெரியபடுத்தியதையடுத்து இ.போ.சபையின் வவுனியா சாலையில் இருந்து பிறிதொரு பேருந்து அனுப்பி வைக்கப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் இரண்டு இ.போ.சபை பேருந்துகளிலும் மக்கள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர்.