போதைப்பொருள் மாப்பியாக்களின் வலையில் எமது சமுதாயம் சிக்கிவிடக்கூடாது! எம்.ராமேஷ்வரன் (video)
கல்வியால் மட்டுமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த இலக்கை அடைவதற்காகவே தற்போதைய சூழ்நிலையில் மலையக கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றன என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைள் தொடர்பான சந்திப்பும், கலந்துரையாடலும் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதம அதிதியாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அ.அரவிந்தகுமார் கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதியாக நுவரெலியா மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான எம்.ராமேஷ்வரன் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது அன்றும், இன்றும், என்றும் கல்விக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கும். ஏனெனில் கல்வியால் மட்டுமே நாம் முன்னோக்கியும் எமது சமூகத்தை முன்னேற்றகரமான பாதையில் அழுத்திச் செல்லவும் வழி வகுக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.
எனவே தான் கல்வி உரிமைகளை கல்வி சார் விடயங்களை வென்றெடுப்பதற்காக நாம் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம். மத்திய ஆட்சியிலும் சரி அதேபோல மாகாண ஆட்சியிலும் சரி கல்விசார் ஆளனியையும் அதேபோல கல்விசார் வளங்களையும் நாம் போராடியே பெற்றுள்ளோம்.
எமக்கான வளங்களையும், வசதிகளையும் அவ்வளவு எளிதில் தந்து விட மாட்டார்கள். இதற்காக அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் காங்கிரஸ் கடுமையாக போராடி உள்ளது என்பதை இவ்விடத்தில் கூற விரும்புகின்றேன். அதன் ஓர் பயனாக இன்று பாடசாலைகளில் சிறந்த பெறுபேறு வருவது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
எதிர்காலத்தில் கல்வி வளர்ச்சியில் மேலும் பல முன்னேற்றங்கள் வேண்டும் அதற்காக எம்மாளான அனைத்து ஒத்துழைப்புகளையும் நாம் நிச்சயம் வழங்குவோம். அதேவேளை இன்று பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை பெரும் கவலைக்குரியது.
இதற்கு நாம் நிச்சயம் முடிவு கட்டிவிட வேண்டும். அதற்காக எமது பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தலைமையில் அண்மையில் பொலிஸார் உள்ளிட்ட பொலிஸ் நிலைய பொதுப்பதிகாரிகள் பாதுகாப்பு தரப்பினர்கள் அதிபர்களை அழைத்து நாம் கூட்டம் ஒன்று நடத்தினோம்.
பாடசாலைகளில் தேவையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் இதற்கான அனுமதியை ஆளுநர் ஊடாக பொலிஸாருக்கு பெற்று தரப்படும் எனவும் நாம் கூறியுள்ளோம்.
எமது சமூகம் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும். எனவே இந்த போதைப்பொருள்
மாப்பியாக்கள் போன்றவர்களின் வலையில் எமது சமுதாயம் சிக்கிவிடக்கூடாது
என்பது தான் எங்களுடைய ஏகோபித்த கோரிக்கையாக இருக்கின்றது. அதனை தடுப்பதற்கு
தேவையான நடவடிக்கைகளையும் நாம் நிச்சயம் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.



