உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட ரணில் அரசாங்கம் சூழ்ச்சி: கம்மன்பில குற்றச்சாட்டு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் தேர்தலைப் பிற்போட ரணில் அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இருமுனைப் போட்டி நிலவுகின்றது.
இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.
தேர்தலை உரிய காலத்தில் நடத்தத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் வேட்புமனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பை ஆணைக்குழு வெளியிடும் என எதிர்பார்த்துள்ளோம்.
பிற்போட அரசு தீவிர முயற்சி
தேர்தலை உரிய காலத்தில் நடத்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலை ஏதாவதொரு வழிமுறையில் பிற்போடுவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் அரசுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இருமுனைப் போட்டி நிலவுகின்றது.
பிரதான காரணிகள்
மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தேர்தல் நடத்துவதைப் பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பெறுமதி சேர் வரி உட்பட நேரடி வரி அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். நடுத்தர மக்கள் நேரடி வரி அதிகரிப்பால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள போது அரசால் மக்கள் மத்தியில் செல்ல முடியாது.
எதிர்வரும் மாதம் முதல் மின் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு தொடர்ச்சியான மின் விநியோகத் துண்டிப்புக்குச் செல்ல நேரிடும் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆகவே, மக்கள் இருளில் இருக்கும் போது அரசாங்கம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த முடியாது.
இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் சென்றால் மக்கள் அடித்து விரட்டுவார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாதம் கிடைக்கப் பெறும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.
தற்போது அடுத்த மாதம் எனக்
குறிப்பிடப்படுகின்றது. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அடுத்த மாதமும்
கிடைப்பது சாத்தியமற்றது. ஆகவே, இவ்வாறான காரணிகளால் அரசாங்கம் தேர்தலைக் கண்டு
அச்சமடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)