பிரதமரின் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி (Photo)
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது என பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைத்த முன்மொழிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் நேற்று பிற்பகல் கூடியிருந்தது.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது குறித்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது உட்பட சாதகமான அம்சங்களுடன் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் 20வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது.
இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, ஜனாதிபதிக்கு எதிரான மக்களின் நிலைப்பாடுகள், அரசியல் நிலைமைகள் என்பன காரணமாக மீண்டும் 19வது திருத்தச் சட்டத்தை சில திருத்தங்களுடன் நடைமுறைக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.