ஆசன எண்ணிக்கைக்கு பயணிகள் சட்டம் நீக்கம்! பேருந்து கட்டணங்கள் குறித்து வெளியான தகவல்
ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பான சட்டம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் குறித்து போக்குவரத்து அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனா தொற்றுநோய் வேகமாகப் பரவுவதைக் கருத்தில் கொண்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பயணிகளை பேரூந்து இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுப்படுத்தும் சட்டத்தை விதித்தார்.
இதனையடுத்து பேருந்து கட்டணமும்; 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், தொற்றுநோயின் முடிவில், அதிகரித்த சதவீதத்தில் 10 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டது.
எரிபொருள் விலை குறைப்பு
எனினும் இன்று, குறித்த சட்டம் நடைமுறையில் இல்லை, எனவே 10 சதவீத அதிகரிப்பை குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், டீசலின் விலை அண்மையில் 15 ரூபாவினாலும் அதற்கு முன்னர் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும், சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
மொத்தத்தில் இந்தத் தொகை 3.8 சதவீதக் குறைப்பு என்றும், பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமானால் குறைந்தது 4 வீதம் குறைய வேண்டும்.
எனவே, பேருந்து இருக்கைகளின் எண்ணிக்கையில் பயணிகளை மட்டுப்படுத்தும் சட்டத்தை சுகாதார அமைச்சு திரும்பப் பெற்றால் பேருந்துக் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதன்படி மொத்த சதவீதமான 13.8 குறைக்கப்பட்டால், தற்போதைய குறைந்தபட்ச பேரூந்துக் கட்டணமான 34 ரூபாயை ஐந்து ரூபாவால் குறைக்க முடியும் எனவும், ஏனைய கட்டணங்களும் அவ்வாறே குறைக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டம் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன்,
பேருந்துக் கட்டணக் குறைப்புச் சலுகையை பயணிகளுக்கு வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.



