பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்து பயணமான சிறீதரன்
தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13 ஆவது பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) சுவிட்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13ஆவது பொருளாதார உச்சி மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோஸ் (Switzerland Davos) நகரில் நடைபெறவுள்ளது.
பொருளாதார உச்சி மாநாடு
குறித்த உச்சி மகாநாடு எதிர்வரும் 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் உலகப்பொருளாதார மகாநாடு நடைபெறும் Davos மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உலகத்தின் 40ற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து 600ற்கு மேற்பட்ட தமிழ் தொழிலதிபர்கள் இந்த மகாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த மகாநாடு பற்றி தெளிவூட்டும் ஆரம்பக்கூட்டம் கடந்த சனிக்கிழமை(01) சுவிஸ்நாட்டில் ஓல்டன் நட்சத்திரவிடுதியில் உலகலாவிய The RISE நிறுவனத்தின் சுவிட்சர்லாந்து நாட்டிற்கான ஒருங்கினைப்பாளரும் தலைவருமான கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த முன்னோடிக்கூட்டத்தில் ஐரோப்பிய சுவிஸ்நாட்டு தொழில் முனைவோர்களும், பல புத்திஜீவிகளும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியுள்ளனர்.
தமிழர்களின் டாவோஸ் பொருளாதார மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 35ற்கு மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்துகொள்கின்றனர்.
அத்துடன் மகாநாட்டின் நிறைவு நாளில் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்கு தமிழர்கள் இடம்பெயர்ந்த 40 ஆண்டுகளை நினைவு கூறும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த மாநாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும்(Senthil Thondaman) கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |