சிறீதரனின் முகநூல் பதிவு: சபை அமர்வில் சர்ச்சையை கிளப்பிய உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முகநூல் பக்கத்தில் அரசாங்கம் காணியை சுவீகரிக்கப்போவதாக தவறான தகவல் பதிவிடப்பட்டதாக தெரிவித்து வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரொருவர் சபை அமர்வில் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நேற்று சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது சபையில் காணி விவகாரம் தொடர்பாக பேசப்பட்டபோது எழுந்த தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரொருவர்,

காணி சுவீகரிப்பு
அண்மையில் தெல்லிப்பழை வித்தகபுரம் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,காணியை அரசாங்கம் சுவீகரிக்கப்போவதாக தகவலை பதிவிட்டுள்ளதாகவும், அவ்வாறு அரசாங்கம் செயற்படவில்லை எனவும், சீமெந்து கூட்டுத்தாபனத்தின் காணியை அமைச்சரவை அனுமதியுடன் பிரதேச செயலகத்தினால் காணி இல்லாத மக்களுக்கு பிரித்து கொடுக்கப்படபோவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் தவறான முகநூல் பதிவுக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவும் கோரியுள்ளார். இயங்காத சீமெந்து கூட்டுத்தாபனத்தின் காணியில் சிலர் தோட்டம் செய்தார்கள்.
அவர்களுக்கு கடிதம் அனுப்பிய பிரதேச செயலகம் மீள் குடியேற்றம் செய்யப்போவதாகவும் உடனடியாக காணியை விடக்கோரியும் கடிதம் அனுப்பினார்.
இதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து கதைத்திருந்தோம். தோட்ட காணிகளை விட்டு ஏனையவற்றில் மீள் குடியேற்றம் செய்யுமாறே அப்போது கோரப்பட்டது.
இதன்போது தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தியின் குறித்த உறுப்பினர், குறித்த விடயத்திற்கு கண்டன தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில் ஏனைய சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவ்வாறு தீர்மானம் கொண்டு வர முடியாது என்று தெரிவித்தனர்.

மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்துக்கு கடிதம்
இந்நிலையில் முகநூல் பதிவை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை தவறான தகவல்களுக்கு தீர்மானம் நிறைவேற்றுவதாக இருந்தால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வடக்கில் இராணுவம் நடத்தும் சிகையலங்கார நிலையங்கள் தொடர்பாக சொன்ன கருத்துக்கும் கண்டனம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர் பிமல் சொன்னது தவறு என ஏற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அதை நாங்கள் தவறு என ஏற்கும் போது நீங்கள் இதை தவறு என ஏன் ஏற்கமுடியாது என கேள்வி எழுப்பினர்.

இது 1970ம் ஆண்டளவில் சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு குத்தகையில் வழங்கப்பட்ட காணி. அந்த காணிகளே தற்போது பகிரப்படவுள்ளது.
காணிகள் மக்களுக்கு பங்கிட்டு வழங்கப்படுகிறதேயொழிய அது சுவீகரிப்பு அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எங்களுடன் கதைக்கும் போது அதை பற்றி சொல்லவில்லை. ஊடகங்களுக்கும் அவ்வாறு கருத்து தெரிவிக்கவில்லை.
முகநூலில் வந்திருந்தால் அதை வேறு உதவியாளர்கள் யாரும் செய்திருக்க முடியும் என தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்ததையடுத்து நிலைமை சுமூகமானது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri