ஓட்டமாவடியில் சட்டவிரோத எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் (Video)
மட்டக்களப்பில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெறும் சட்டவிரோத எரிபொருள் விநியோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனிப்பட்ட சிலருக்கு பெட்ரோல் விற்பனை இடம்பெறுவதாக கூறியே பொதுமக்கள் நேற்று(29) இரவு ஐந்து மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டமாவடி
கடந்த 24ஆம் திகதி அரச உத்தியோகத்தர்களுக்கும் பொது மக்களுக்கும் ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகளின் மேற்பார்வையில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
அடுத்த நாள் சனிக்கிழமை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் பெட்ரோல் விநியோக குழாய் பழுதடைந்ததாக கூறி பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று(29) பழுதடைந்த பெட்ரோல் விநியோக குழாய் திருத்தப்பட்ட நிலையில் பெட்ரோல் விநியோகம் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் பொது மக்கள் பெட்ரோல் விநியோகம் இடம்பெறவில்லை எனவும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழல் இடம்பெறுவதாகவும், இரவு நேரங்களில் தனிப்பட்டவர்களுக்கு தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி மேம்பாலத்திற்கு முன்பாக வாகன போக்குவரத்தை மறித்து தங்களது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
அந்த இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய போது, எரிபொருள் நிலையத்தில் உள்ள இருப்பை தமக்கு காட்டினால் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் அங்கு வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் இன்று(30) காலை 08.30 மணிக்கு உரையாடியுள்ளார்.
தீர்வு
உரையாடலை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருப்பை பரிசோதித்து இருப்பு இருக்கும் பட்சத்தில் அதனை பொதுமக்களுக்கு விநியோகிக்க தான் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
எரிபொருள் இருந்தால் இன்று(30) விநியோகிக்கப்படும் என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கமைய மோட்டார் சைக்கிள்களும், முச்சக்கர வண்டிகளும் நீண்ட வரிசையில் காத்து நின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.