இலங்கையர்கள் எட்டு பேருக்கு நைஜீரிய நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நைஜீரிய எண்ணெய் குதத்தில் இருந்து கச்சா எண்ணெய்யை பெற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 இலங்கையர்கள் உட்பட 26 கடற்படையினரை விடுவிக்க நைஜீரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஈக்குவாடோரியல் கினியா மாநிலத்திற்குச் சொந்தமான கடற்பரப்பில் எட்டு இலங்கையர்கள் உட்பட 26 பணியாளர்கள் நைஜீரிய பிராந்திய கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் வியாபாரம் செய்ய முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் நைஜீரியாவின் போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அதிகாரம் இல்லாமல் நைஜீரியாவில் கச்சா எண்ணெய் வியாபாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்த குற்றச்சாட்டை மறுத்த இலங்கையர்கள் உட்பட கடற்படையினர், நைஜீரியாவுக்குச் சென்றபோது தங்களிடம் கச்சா எண்ணெய் இல்லை என்றும், கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்கவே இந்த கடல் எல்லைக்கு வந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 26 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கப்பல் நிறுவனம் 11,000 அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்துமாறும் நைஜீரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.