கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! ஒட்டாவாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கூறியது
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாய் - தர்ஷனி பண்டாரநாயக்க 35 வயது, இனுக விக்கிரமசிங்க - 07 வயது, அஸ்வினி விக்கிரமசிங்க - 04 வயது ,றின்யானா விக்கிரமசிங்க - 02 வயது, கெலீ விக்கிரமசிங்க - 02 மாதங்கள் காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான தகவல்
கூரிய ஆயுதத்தினால் இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் சந்தேகநபரான இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர் உயிரிழந்த குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலைக்கான காரணம்
இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டாவா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இலங்கையர்கள் குருணாகல் - பொல்கஹவெல பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே கனடாவுக்கு சென்றுள்ளதாக உயிரிழந்த தர்ஷனி ஏகநாயக்கவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள், தேவையேற்படின் நாட்டுக்கு கொண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், அதற்கான செலவீனங்கள் தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும் கனடாவின் ஒட்டாவாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் அன்சுல் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சடலங்கள் கிடைக்கப்பெறும் தினம் தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் தமக்கு கிடைக்கபெறவில்லை எனவும் கனடாவின் ஒட்டாவாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |