சுவிட்ஸர்லாந்தில் ஈழத்தமிழருக்கு கிடைத்துள்ள உயரிய அரசியல் பதவி
சுவிட்ஸர்லாந்தின் செயின்ட் கேலன் (St. Gallen) நகர மாநிலத்தின் தலைவராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று (20) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கையிலிருந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதிலியாக சுவிட்ஸர்லாந்து சென்ற ஜெயக்குமார் துரைராஜா, பசுமை கட்சி (Green Party) சார்பில் போட்டியிட்டு, செயின்ட் கேலன் நகரின் உயரிய அரசியல் (Stadtparlament-Präsident) பதவிக்கு தேர்வாகியுள்ளார்.
இலங்கைத் தமிழர்
இந்தநிகழ்வில் அவையின் ஏனைய கட்சி உறுப்பினர்கள், அவருடன் இணைந்து அரசியல் பயணத்தில் பயணித்த நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அமர்வின்போது அவர் திருக்குறளை மூன்று தடவைகள் முன்மொழிந்து, அதனை ஜெர்மன் (Deutsch) மொழியிலும் விளக்கி உரையாற்றினார். இதன் மூலம் தமிழர் பண்பாட்டு மதிப்புகளை சர்வதேச அரங்கில் எடுத்துரைத்தார்.

மேலும், தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் இசை நிகழ்ச்சிகள் அவையரங்கில் இடம்பெற்றதுடன், தமிழர் பாரம்பரிய சிற்றுண்டி உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.
கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா, தனது ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையிலும், உயர் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பெற்றுள்ளார்.
ஏதிலிகளுக்கான குரல்
செயின்ட் கேலன் நகர மக்களில் சுமார் 30 சதவீதம் பேர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள் என்பதைக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்காக குரல் கொடுப்பதையும், இனவெறி மற்றும் சமூக புறக்கணிப்புக்கு எதிராகப் போராடுவதையும் தனது முக்கிய பொறுப்பாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
“என் முன்னோடி ஜாக்லின் காசர்-பெக், கிரீன் கட்சியிலிருந்து வந்தவர். அவரின் பாதையில் நடக்க நான் தயாராக இருக்கிறேன்,” எனவும் அவர் கூறினார்.

2011ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்து குடியுரிமை பெற்ற ஜெயக்குமார் துரைராஜா, ஒருகாலத்தில் ஆவணமற்ற அகதியாக செயின்ட் கேலன் வந்தவர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கட்சி சார்பில் நகரமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் அவர், தற்போது 56 வயதில் இந்த உயரிய பதவியை அடைந்துள்ளார்.
“ஆவணங்களும் இல்லை, கல்வியும் இல்லை, கைப்பையும் இல்லை” என்ற நிலையில், 1988ஆம் ஆண்டு 18 வயதில் சுவிட்ஸர்லாந்தில் காலடி வைத்த ஜெயக்குமார் துரைராஜா, இன்று ஏதிலிகளுக்கான குரலாகவும், சமூகநீதிக்கான முன்னணித் தலைவராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.


