லண்டன் சிறையில் இலங்கை தமிழர் தற்கொலை - வெளிவரும் பல முக்கிய தகவல்கள்
லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரின் தற்கொலைக்கு குறித்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களே அதற்கு பொறுப்பு என தற்போது உறுதியாகியுள்ளது.
வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி கேதீஸ்வரன் குணரத்தினம் என்ற இலங்கை தமிழர் தற்கொலை செய்துக் கொண்டார்.
இறப்பதற்கு சில நாட்களாக உணவு உண்ண மறுத்து பட்டினியாக இருந்து வந்த அவர் தற்கொலை தொடர்பில் பேசி வந்ததாக மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற மனநிலையில் இருந்த கேதீஸ்வரன் குணரத்தின சிறைச்சலை ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பரிசோதனை செய்ய தவறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சித்திரவதை அனுபவித்த கேதீஸ்வரன் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார். அகதியாக வந்த அவர் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டு வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.
உரிய பராமரிப்பு இன்மையினால் கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறைச்சாலையால் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி இல்லை மற்றும் அதிக வேலை செய்யும் சிறை அதிகாரிகள் அவர் உணவை சாப்பிட மறுத்ததை பதிவு செய்யத் தவறிவிட்டனர்.
கேதீஸ்வரன் புகலிடம் கோரி விண்ணப்பிக்கலாம் என்ற முக்கிய விடயத்தையும் அவரிடம் தெரியப்படுத்தப்படவில்லை. இது தொடர்பிலான ஆவணங்கள் மற்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு சரியாக பதிலளிக்கப்படவில்லை. கைதியின் கோரிக்கை தீர்க்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
பிரித்தானிய அதிகாரிகளின் மந்தமான பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது என கூறப்பட்டுள்ளது.
நீதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், எங்களின் எண்ணங்கள் கேதீஸ்வரன் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இருக்கும். மரண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை பரிசீலித்து உரிய நேரத்தில் பதிலளிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.