உலகளவில் சாதனை படைத்து வரும் இலங்கை சிறுமி - வரலாற்று சாதனை பதிவு
இலங்கையைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீராங்கனையான ஓஷினி தேவிந்தியா குணவர்தன, உலக சதுரங்க சம்மேளனத்தால் Woman Fide Master (WFM) விருதைப் பெற்றுள்ளார்.
கொழும்பு விட்சர்லி சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயதான ஓஷினி தேவிந்தியா குணவர்தன, FIDE மாஸ்டர் விருதை வென்ற இலங்கையின் இளம் வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற உலக கேடட் செஸ் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற ஓஷினி, 75க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்களை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
சாதனை சிறுமி
உலக இளையோர் செஸ் வரலாற்றில் இலங்கை வீரர் ஒருவர் வென்ற முதல் மற்றும் ஒரே தங்கப் பதக்கமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பதக்கத்தை வெல்லும் போது அவர் 06 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இந்த வெற்றி ஓஷினிக்கு FIDE மாஸ்டர் விருது வழங்க ஒரு சிறப்பு காரணமாக கூறப்படுகிறது.
இவ்வாறு இலங்கை செஸ் வரலாற்றை புதுப்பித்து சாதனைகளை படைத்து முன்னோக்கி வரும் ஓஷினி, இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளார்.
தற்போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளையாட்டு துறையில் சாதித்து வரும் ஓஷினி தனது 08வது வயதில் முதன்முறையாக இலங்கையில் வெற்றியை பதிவு செய்திருந்தார்.
உலக இளையோர் செஸ் போட்டி
உலக இளையோர் செஸ் போட்டியில் 8 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் அவர் இந்த வெற்றியை பெற்றிருந்தார்.
அதன் பின்னர், ஆசிய இளைஞர், மேற்கு ஆசிய மற்றும் இளைஞர் பொதுநலவாய நாடுகளின் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 08 வயதுக்குட்பட்ட, 10 வயதுக்குட்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்காக பதக்கங்களை வென்றுள்ளார்.
சர்வதேச தரவரிசையின்படி இலங்கையின் முதல்தர சதுரங்க வீராங்கனையாக இருக்கும் ஓஷினி, சர்வதேச தரவரிசையில் 1980 போனஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.