இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் - உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரு கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்காக படகொன்றில் இரண்டு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர்.
இந்திய படையினரால் கைது
காணாமல்போன இருவரையும் , உறவினர்கள் தேடி வந்த நிலையில் காணாமல்போன இருவரும் பயணித்த படகு கடலில் பழுதடைந்த நிலையில், இருவரும் கடலில் தத்தளித்த வேளை , அவர்களை மீட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் அவர்களுக்கு உணவளித்து அவர்களை படகுடன் இலங்கை கடற்பரப்புக்கு அழைத்து வந்து விட்டுசென்றுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் அவர்களின் படகு நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு இந்திய கரையில் கரையொதுங்கிய நிலையில் இந்திய கடலோர பொலிஸ் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை
இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் இருவரையும் பாதுகாப்பாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் அவர்களின் தொழில் உபகரணங்களை அவர்களிடம் வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவர்களை தேடுவதற்கு உதவி புரிந்த கடற்தொழில் அமைச்சர் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கயேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மீன்படி நீதியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.