டொலர் வீழ்ச்சியின் பின்னணியிலுள்ள மர்மம்: இலங்கை ரூபாவின் உண்மை நிலை என்ன..!
இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் வீழ்ச்சி தற்போது அதிகம் பேசப்படும் விடயமாக உள்ளது.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியானது நாட்டின் பொருளாதார நிலையின் வளர்ச்சியை காட்டுவதாக ஒரு தரப்பு கூறினாலும், மற்றொரு தரப்பு வேறுமாதிரியான கருத்தினையே முன்வைக்கிறது.
அந்த வகையில் அரசாங்க நிதி இராஜாங்க அமைச்சரான செஹான் சேமசிங்க வெளியிட்ட கருத்து நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறும் விடயத்திற்கு நேர் எதிராக இருக்கின்றது என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதி இராஜாங்க அமைச்சரின் கருத்து
அண்மையில் அநுராதபுரத்தில் வைத்து செஹான் சேமசிங்க கருத்துரைக்கையில், பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை. அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக பேசப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
நிதி அமைச்சரின் கருத்து
எனினும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க, இதுவரை காலமும் தடைப்பட்டிருந்த நிதி உதவிகள் நாட்டிற்கு கிடைக்க ஆரம்பித்த பின்னர் நாட்டின் டொலர் கையிருப்பு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்குரோத்து நிலையிலிருந்து நாடு விடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணை பேச்சுவார்த்தையொன்றை ஏப்ரல் மாதமளவில் முன்னெடுக்கவுள்ளோம்.
அதன் பின்னர் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் விரைவில் கைசாத்திட எதிர்பார்க்கிறோம். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் நிறைவடையும். எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாகவே இந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.
அதன் பின்னர் உலக அரங்கில் கடனை மீளச் செலுத்தக்கூடிய நாடு என்ற உறுதியைப் பெற்றுக்கொள்வோம். இதுவரை காலமும் தடைப்பட்டிருந்த நிதி உதவிகள் நாட்டிற்கு கிடைக்க ஆரம்பித்த பின்னர் நாட்டின் டொலர் கையிருப்பு அதிகரிக்கும்.
தற்போதும், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் எம்முடன் வணிகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தவிர்த்து வருகின்றன. மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவு செய்யும் பட்சத்தில் அவர்களின் ஒத்துழைப்பு மீளக் கிடைக்கும்.
அதனால் எமது நாணயக் கையிருப்பும் அதிகரிக்கும். நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதியமைச்சரான ரணில் நாடு நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு விட்டதாக கூறுவதும் நிதி இராஜாங்க அமைச்சர் பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என கூறுவதும் மக்களை குழப்பும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
மறைக்கப்படும் உண்மை
இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வருவதாலேயே டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி 325 ரூபாவாக இருந்த டொலர், மார்ச் 22ஆம் திகதி 303 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
டொலர் வீழ்ச்சியடைவதற்கு பதிலளித்த அரசாங்கம், பொருளாதாரம் வலுவடைவதால் டொலர் வீழ்ச்சியடைகின்றதாக கூறி உண்மையை மறைக்கின்றது. பொருளாதாரத்தின் படி, டொலரின் மதிப்பு வீழ்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
முதல் காரணம், ஏற்றுமதி வருமானம், சுற்றுலா வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணவரவு அதிகரிப்பு ஆகும். இரண்டாவது காரணம் இறக்குமதி குறைவதால் டொலருக்கான தேவை குறைகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நிரந்தரமற்ற வளர்ச்சி
இதேநேரம் இலங்கையில் டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும், எனினும் இது நிரந்தமான ஒரு வளர்ச்சிப்படி இல்லையென பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் தொகை 299 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து 250-260 ரூபாய் என்ற மட்டத்தை எட்டக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வார்கள், அதே போல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, நாம் பெறும் அந்நிய செலாவணியின் அளவு கணிசமாக அதிகரிப்பது போன்றவை ரூபாவை மேலும் பலப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன்கள் மற்றும் உதவிகளும் ரூபா வலுவடைவதற்கு மற்றொரு காரணம். எனினும் வெளிநாட்டு கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வாகன இறக்குமதிக்கான தடை நடைமுறையில் உள்ளது. பின்னணியில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ளதை மறந்துவிடக் கூடாது என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்குள் வரும் டொலர்கள் குறைந்து வெளியேறும் தொகை அதிகரித்தால், எல்லாம் தலைகீழாக மாறும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான சூழலில் நாட்டில் தற்போது பதிவாகும் வளர்ச்சி நிலை நிரந்தரமானதா, இல்லையெனில் இன்னுமொரு வரிசை யுகத்தை மக்கள் சந்திக்க நேருமா, தேர்தலுக்காக மற்றும் மக்களின் வாக்குகளுக்காக நடத்தப்படும் கண்கட்டு வித்தைகளா என்பதை பொறுத்திருந்து அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயே நாட்டு மக்கள் இருக்கின்றார்கள் என பொருளாதார வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |