கூட்டமைப்புடன் சமஷ்டி முறைமையிலேயே பேசுங்கள்! ரணிலிடம் சிறீதரன் வலியுறுத்து
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதயசுத்தியுடன் இருக்கின்றார் என்றால், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பாராக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சமஷ்டி அடிப்படையிலேயே பேச வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18.11.2022) நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
"2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் உரையாற்றுபவர்கள், இது ஜனாதிபதி கொண்டு வந்துள்ள வரவு - செலவுத் திட்டம் என்றும், இது நாட்டில் பெரிய மாற்றத்தைத் தருவதைப் போன்றும் கருத்துக்களை கூறுகின்றனர்.
வரவு - செலவுத் திட்டம்
அவரின் ஆதரவாளர்களே இவ்வாறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். நாடொன்றின் வரவு - செலவுத் திட்டம் என்பது வருமானத்தின் எல்லை, செலவு எவ்வளவு என்பதைக் கூறும் வகையிலேயே இருக்க வேண்டும்.
ஆனால் அன்றாடம் காட்சி போன்றே ஜனாதிபதி இந்த வரவு - செலவுத் திட்டத்தைத் சமர்ப்பித்துள்ளதாகவே நினைக்கின்றேன். அன்றைய நாளில் யாரிடமாவது கடனை வாங்கி, தான் இந்த நாட்டை கொண்டு போவது போன்றே அவர் கனவு காண்கின்றார்.
ஆனால் பேரண்ட பொருளாதாரத் திட்டங்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை. இந்த வரவு - செலவுத் திட்டம் மீண்டும் போரைப் போன்று படைகளுக்கான நிதியைக் குவித்துள்ளது.
யுத்தமில்லாத நாட்டில் எதற்கு இவ்வாறு அதிக நிதியை இதற்காக ஒதுக்க வேண்டும்? 75 வீதமான படையினர் வடக்கிலும், கிழக்கிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மயிலிட்டி போன்ற இடங்களில் தமிழ் மக்களின் காணிகளில் படையினரே விவசாயம் செய்கின்றனர். வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் படையினரின் பண்ணைகள் போன்றே உள்ளன. இதற்காக ஒதுக்கும் பணத்தை ஏன் அங்குள்ள விவசாயிகளுக்காக ஒதுக்க முடியவில்லை.
அவ்வாறு ஒதுக்கி அவர்கள் முன்னேறும் முறையை உருவாக்கியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும். ஆனால், இராணுவத்தை தக்க வைப்பதற்காகவும், அவர்களின் பலத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கான சூழ்ச்சி வலையாகவும் இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மீண்டுமொரு போருக்கு அடிகோலுகின்ற மற்றும் அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.
பௌத்த மேலதிக்க மற்றும் இனவாத சிந்தனைகள்
இதேவேளை, இந்த நாட்டின் அரச இயந்திரம் இயங்க முடியாத நிலைமையில் உள்ளது. அதனை இயக்க முடியாது தடுமாறுகின்றனர். எப்படி இயந்திரத்தை இயக்கப் போகின்றீர்கள்? உங்களின் மனங்களில் உள்ள பௌத்த மேலதிக்க மற்றும் இனவாத சிந்தனைகள் ஒருபோதும் உங்களின் பொருளாதார சிந்தனைகளை மேலோங்க விடாது.
தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றாக வாருங்கள் என்று அரசில் உள்ளவர்கள் கூறுகின்றனர். ஏதோ தீர்வுகளை கையில் வைத்திருப்பதைப் போன்றே மகிந்தானந்த அளுத்கமக மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கூறுகின்றனர்.
நிமல் சிறிபால டி சில்வா தமிழ் மக்களுடனான பல்வேறு பேச்சுகளுடன் தொடர்புபட்டவர். அவருக்கு என்ன காரணத்துக்காகத் தீர்வுகளை வழங்கவில்லை என்பது தெரியாதா? ஆகவே இவர்கள் காலத்தைக் கடத்தும், ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள்.
இனவாதம் மற்றும் பௌத்த பேரினவாத சிந்தனைகளில் இருந்து வெளியே வந்து சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எவ்வாறு வழங்குவது என்ற வழியைப் பார்க்குமாறு சிங்கள இளைஞர், யுவதிகளை நாங்கள் கேட்கின்றோம்.
தவறான சிந்தனைகள் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளன. சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் கதைக்கின்றனர். ஆனால், இங்கே இராணுவத்தைக் குறைக்காது, அதற்காக ஒதுக்கும் நிதியைக் குறைக்காது.
இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை முன்வைக்காது, சர்வதேச நாணய நிதியம் உங்களுக்கு உதவி வழங்கினால், எமது இனத்துக்கு உலகம் செய்யும் துரோகமாகவே அமையும்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதயசுத்தியுடன் இருக்கின்றார் என்றால், இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள பிரச்சினையை தீர்க்க சரியான மனிதனாகவும், உண்மை முகத்தை வெளியில் கொண்டு வரவும் விரும்பினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சமஷ்டி அடிப்படையில் பேசுங்கள். சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதயசுத்தியுடன் இருக்கின்றார் என்றால், இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பாராக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சமஷ்டி அடிப்படையிலேயே பேச வேண்டும்" என்றார்.