அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா...!
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினருடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தம்மை போட்டியிடுமாறு பலர் கோரியுள்ளனர். அதனடிப்படையில் தேவை ஏற்பட்டால் மற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடன் வாழும் ஒரு அரசியல் கட்சி எனவும் மக்களின் கோரிக்கை தாம் ஜனாதிபதியாக பொறுப்பேற்பது என்றால் அதனை நிராகரிக்க வேண்டிய தேவை தமக்கு இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியாது
இதேவேளை, இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு ஊழல்மிக்க அரசியல்வாதிகள் காரணமெனவும் அவர்களிடமிருந்து நாட்டின் ஜனநாயகத்தை காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஊழல்மிக்க அரசியல்வாதிகளிடமிருந்து ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொண்டாலும் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியாதென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |