இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இரண்டு வருடங்களில் வீட்டு உரிமைப் பத்திரங்கள்
நாட்டில் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த வீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்களுக்கு வசதியான வீட்டு வசதிகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை அரசாங்கம் வழங்கவுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இரண்டு வருடங்களில் உரிமைப் பத்திரங்கள்
அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எனவே, அடுத்த இரண்டு வருடங்களில் 30,000 உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டுத் தொகுதிகள் நிர்மாணப் பணிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில் மீண்டும் நாட்டில் அபிவிருத்திப் போரை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த வீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
கொழும்பு மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கள்
கொழும்பில் உள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க குறைந்தபட்சம் 200,000 அடுக்குமாடி குடியிருப்புகளை நாங்கள் நிர்மாணிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் இந்த இலக்கை அடைய அமைச்சு ஏற்கனவே குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி நிதியைப் பயன்படுத்தி சுமார் 260 நகர அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, மேலும் ஐந்து திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், “ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு” திட்டத்தின் கீழ் தனிநபர் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
பிரதேச செயலக மட்டத்தில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராம நிர்வாகி பிரிவுக்கும் ஒரு வீடு உட்பட 15,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.