கோட்டாபயவினால் 359,000 ரூபாவை இழந்த இலங்கை மக்கள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்ததன் மூலம் ஒவ்வொரு இலங்கையர்களும் 359,000 ரூபாவை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் 8 வீத கடன் வட்டியை செலுத்தாவிடின் கடன் 2030 இல் இரட்டிப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பொருளாதார குற்றவியல் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். நாணய நிதியத்தின் ஒப்பந்தப் பத்திரம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் கட்டளைகள்
மத்திய வங்கியின் சுதந்திரத்திற்கான கட்டளைகள், கொள்முதல் செயல்முறையை சரி செய்வதற்கான கட்டளைகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான கட்டளைகள் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் தொடர்பான தனியான கட்டளைகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 157வது பிரிவின்படி இரு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வர, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, அத்தகைய நிறுவனங்களுக்கு ஏற்றவாறு அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும்.
நாட்டின் திவால்தன்மையால் ஏற்பட்ட பேரழிவின் அளவு குறித்து தெளிவான மற்றும் குறிப்பிட்ட கணக்கீடு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி 89 பில்லியன் டொலர்களாக இருந்தது, ஆனால் அது 2020 ஆம் ஆண்டு 85 பில்லியன் டொலர்களாகவும், 2022ஆம் ஆண்டு 75 பில்லியன் டொலர்களாகவும் குறைந்தது. 2020 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டுவரை கோட்டாபய ஆட்சியில் இல்லை என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 123 பில்லியன் டொலர்களாக இருந்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.