பெருநாள் முழுவதும் மண்ணெண்ணெய் தேடி அலைவதிலேயே முடிந்தது: சலிப்பின் உச்சத்தில் முஸ்லிம் மக்கள்
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான முறையில் சந்தோசமாகப் பெருநாளைக் கொண்டாட முடியவில்லை; மண்ணெண்ணெய் தேடி அலைவதிலேயே பெருநாள் முடிந்தது என இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் மண்ணெண்ணெய்யுமில்லை, எரிவாயுவுமில்லை. இதனால் நோன்பின் இறுதி நாளை சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை.
நோன்பு காலத்தில் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தேடி அலைந்தோம். போதாமைக்கு மின்சாரமுமில்லை.
உணவை சமைத்துக் கொள்ள முடியாமல் உள்ளது. இதற்குமேல் பட்டினிதான். பொருட்கள் உச்சவிலைக்குச் சென்றுள்ளன.
உழைப்பில்லை, பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை. விலை அதிகரிக்கப்பட்டாலுமே பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு மேலே எல்லோரும் சாக வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.