லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்! வெளியான தகவல்கள்
கிழக்கு லண்டனில், இலங்கையர் ஒருவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 16ஆம் திகதி, கிழக்கு லண்டனிலுள்ள கல்லறை ஒன்றில் இலங்கையர் ஒருவர் இறந்துகிடந்ததைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பொலிசாருக்குத் தகவலளித்தார்.
விசாரணையில், அவரது பெயர் ரஞ்சித் (Ranjith Kankanamalage, 50) என்பதும், அவரது உறவினர்கள் இலங்கையில் இருப்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், தீவிர வன்முறை மீது அதீத ஆர்வம் கொண்ட எரிக் (Erik Feld, 37) என்பவர், ரஞ்சித்தை சுத்தியலால் அடித்தே கொலை செய்தது தெரியவந்தது.
வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
தற்போது எரிக்கின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதுடன், வழக்கு தொடர்பான சில புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன. எரிக், ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது வெறுப்பு கொண்டவராம். ரஞ்சித் ஓரினச்சேர்க்கையாளராம். அவர் கொல்லப்பட்ட கல்லறை, ஓரினச்சேர்க்கையாளர்கள் சந்தித்துக்கொள்ளும் இடம் என கூறப்படுகிறது.
ஆக, ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது வெறுப்பு கொண்ட எரிக், வன்முறையிலும் அதீத ஆர்வம் கொண்டவர் என்பதால், ரஞ்சித்தைக் கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
எரிக் தரப்பு வாதம்
ஆனால், எரிக்கின் சட்டத்தரணி, எரிக் ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பவர் என்பதால் ரஞ்சித்தைக் கொலை செய்யவில்லை என்றும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது, எரிக் தனது கோபத்தை வெளிப்படுத்தும் நேரத்தில் அங்கு ரஞ்சித் இருந்ததால், ரஞ்சித் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார். எரிக்கோ, தன்னை ரஞ்சித் தாக்கக்கூடும் என பயந்து தான் அவரைத் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அப்படி பயந்து தற்காப்புக்காக தாக்கவேண்டுமானால், எரிக்கின் ஒரு சுத்தியல் அடியே ரஞ்சித்தை செயலிழக்கச் செய்திருக்கும் என்று கூறியுள்ள அரசு தரப்பு சட்டத்தரணி எரிக் தரப்பு வாதத்தை நிராகரித்துவிட்டார்.
மனநல பாதிப்பு கொண்ட எரிக் தொடர்பில் மன நல மருத்துவர்கள் அறிக்கை ஒன்று அளிப்பதற்காக, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.